ரசிகன்!
*
எனக்கு
இன்னும் புரியவே இல்லை...
நீ
பூக்கடைக்கு என்ன வாங்க சென்றாய்;
கோயிலில்
யாரை கும்பிட்டு நின்றாய் என்று?!

. * .
உன் பெயர் தெரியாததால் தான்.,
பொத்தாம்பொதுவாய்
சொல்லிவிட்டு போகிறான் குடுகுடுப்புக்காரன்-
'இந்த வீட்டுக்கு
மகாலட்சுமி வர போறா' என!

. * .
தேவதைகள்
வானிலிருந்து தான் வருவார்கள் என்றில்லை...
உன்னை போல
வீட்டிலிருந்து கூட வருவதுண்டு!

. * .
சரியாய்
மாலை 5 மணிக்கு
வர சொல்லியிருந்தாள்...

கொஞ்சம்
அரை மணி நேரம்
முன்னதாகவே சென்ற என்னை
"சீக்கிரம் வர மாட்டியா?" என்று
கோபித்துக் கொண்டவளை
என்ன சொல்ல?

அவ்வளவு காதல்...
அவ்வளவும் காதல்!

. * .
எப்போதும்
தேவதையாய் தெரிகிற நீ..,
நான் மற்ற பெண்களோடு பேச மட்டும்
பேயாட்டம் ஆடி விடுகிறாய்!

. * .
இராப்பொழுதுகளில்
உன் கண்கள் மின்மினிப் பூச்சிகள்;
மற்றபடி வெட்டுக் கிளிகள்!

. * .
- ரசிகன்
. *
ரசிகன்!



மனித வர்க்கத்தின்
மாமிச மனதை
கலவரப்படுத்திக் கொண்டிருக்கக்கூடும்
மூலையில் ஒரு காதலும்
முடுக்கில் ஒரு காமமும்!

எவனும் தப்பிப்பதாயில்லை...
அவளிடத்தில்
குற்றவாளியாய் சரணடைவதை விட
வேறு பேறும் பெரிதில்லை...

எவளும் சிக்குவதாயில்லை...
அவனிடத்தில்
காதலியாய் முன்மொழிவதை விட
வேறு காரணி தேவையில்லை..

காமமும் காதலும்
ஒன்று கூடும்
ஒரு வேதியியல் திருவிழா!

நிலவின் மகரந்த வீச்சில்
பூக்களின் விரிப்பில்
அவள் மார்போடு
அவன் ஊர்ந்து சாய்ந்தாட

ஒரு மனிதன்
காதல் என்கிறான்..
ஒரு மனிதன்
நண்டூருது நரியூருது என்கிறான்!


-ரசிகன்


நன்றி
வார்ப்பு
http://vaarppu.com/view/2477/


*
ரசிகன்!


தாளத்துக்கேற்ற நடனம்
வசிய பார்வை
விஷம புன்னகை
மழலை பேச்சு…

அடிமை பட்டுக்கிடக்கும்
ஒரு ரசிகனாய்
நீ ரசிக்க
பட்டாம்பூச்சிகளுக்கு வலிக்க வலிக்க
பிடித்துத் தருகிறேன் காதலாய்…

கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க
சிறகில் ஒன்று உடைந்து போகிறது…
அருவருப்பாய் தூக்கி எறிகிறாய்
அதிலிருந்த சிவப்பொன்று
என் முகத்தில் தெறிக்க

வண்ணமா ரத்தமா?
பாவத்தின் அச்சத்தோடு
தலையில் கை வைத்தமர்கிறேன்!

சாக துடிக்கும் அப்பூச்சியின்
கன்னங்களை அள்ளி பார்த்திட
அதன் மர்ம புன்னகை
என் முகத்தில் அறைந்து இறக்கிறது..
கண்ணீர் சிலுவையில் நான்!

- ரசிகன்

நன்றி
திண்ணை
http://puthu.thinnai.com/?p=924

நன்றி
விகடன்

*
ரசிகன்!


என் கரத்தை
இறுக்கப் பிணைத்து
உரக்கச் சொல்லியிருக்கிறாய்
நான் நீ என்றும்
நீ நானென்றும்!

பேசி தீர்க்க வேண்டிய
சில மனஸ்தாபங்களையும்
சொல்லி புரிய வைக்க வேண்டிய
சில உணர்வுகளையும்
ஒரு காதல்
மற்றுமொரு அகங்காரம்
ஒடுக்கி வைத்திருப்பதென்னவோ
அப்பட்டமான நிஜம்!

இணைய உரையாடல்களில்
நீ ஒளிய வேண்டியதில்லை...
தொலைப்பேசி அழைப்புகளை
நீ துண்டிக்க வேண்டியதில்லை...
சமூக வலையமைப்புகளில்
எனை நீக்க வேண்டியதில்லை!

நான் ஆணென்ற
ஒரு செருக்கும் உண்டெனக்கு!

நீ
தாழிடாமலே தூங்கலாம்...
இனியும் தட்டுவதாயில்லை
புறக்கணிப்பின் கதவுகளை...!


- ரசிகன்

நன்றி,
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14767:2011-05-22-17-50-11&catid=2:poems&Itemid=265



*
ரசிகன்!


என்னை
கடந்து செல்லும்
பெண்ணவள் தோழிக்கூட்டமும்
தேரோட்டம் தான்!

யாரிந்த பெண்ணோ
கதை பேசி நடக்கின்றாள்...
என்னுடலில் கை தீண்டாமல்
உயிர் கொன்று போகின்றாள்...

முட்டும் சாலை வளைவில்
முகம் திருப்பி
என்னுயிர் தூக்கி எறிகின்றாள்!

அப்பக்கம் வந்த
பட்டாம்பூச்சி
எனை பார்த்து கேட்கிறது...

அலட்டிக்கொள்ளாத
ஒரு அழகு..
மடிப்பு கலையாத கைக்குட்டை
சிவப்பு சாயம் பூசிய சிரிப்பு...

யார் அந்த தேவதை???


- ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311051517&format=html



ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button


*
ரசிகன்!




அதிகாலை
தேநீர் கோப்பைக்கும்
சாயுங்கால மதுக்கோப்பைக்கும்
இடைப்பட்ட குக்கிராமம் எனது!

வற்றிப்போன இதயங்கள்
குடியிருக்கும்
மிக விசாலமான தெருவில்
இடதுபக்கம் என் வீடு...

முற்பொழுதொன்றில்
அவள் பார்வை பட்ட
ஒதுக்குப்புறத்தில் எனதறை...
அலங்கோலமாய் தானிருக்கும்
குப்பை இருக்காது!

அதில்
நான்கு பேர் மொத்தம்...
ஒரு நான்,
ஒரு பொய்,
ஒரு வால் அறுபட்ட கனவு,
மற்றுமொரு துணையிழந்த நினைவு!

பின்னிரவுகளில்
ஜன்னல் வழி வரும்
நிலா,
மற்றும் பூனைக்குட்டி கணக்கில் இல்லை!

- ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311050814&format=html

.
ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button


<3
ரசிகன்!




யுத்த களத்தின்
புழுதியில் நசுக்கப்படுகிறது
என் இரவுகள்!

சுட்டெரிக்கும் நிலவில்
பரிமாறப்படும் நிழலில்
நீ நீயாக காட்சியளிப்பதில்லை எனக்கு!

மந்திரக்காரியாகவே
தந்திரங்களை முன் வைக்கிறாய்!
சுவாரசியங்களை கவிதை எழுதுகிறாய்!
நிர்வாணமாகிறது எனதறை!

நிபந்தனையோடு
கரையத் தொடங்குகிறாய்...
வெற்றியில் பாதியும்
தோல்வியில் பாதியும் எனக்கு!

அச்சத்தின் வாடையோடு
களமிறக்கப்படுகிறது
கூர் தீட்டப்பட்ட வாளோடு புரவி!


- ரசிகன்

நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=311043018&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button


*