ரசிகன்!


முன்பொரு கவிதைகளில்
இல்லாத ஓர் உயிர்
மரிக்க தொடங்கியிருந்தது
இக்குறிப்புக்குள்...

மௌனங்கள்
வாய் விட்டு அழுகிறதென்ற
ஒரு வரம்பு மீறிய பொய்
என் விதிகளுக்கு உட்பட்டது தான்!

நெடு நேர பேச்சுக்கள்
மௌனங்களாகவே முடிந்த
இரவை என்னவென்று குறிப்பிட்டு வைக்க?

அவள் முதல் முத்தமும்
அது சார்ந்த ஈரமும்
முழு காமத்தை வித்திட்டதென
வெட்கம் விட்டு சொல்ல
முடியவில்லை எனக்கு!அவள் காதலென நெருங்கி வந்தாள்..
நான் காமமென தள்ளி சென்றேன்...
இந்த இடைவெளியை நிரப்பிடவே
பல இரவுகளோடு சண்டையிட்டு
மண்டியிட்டிருக்கிறேன்...

பிறிதொரு நாள்
தன்னை
பெண் பார்க்க வந்ததாய் கதறியவளை
என்ன சொல்லி ஆசுவாசப்படுத்த?

ஒரு பெருத்த
ஏமாற்றம் எனக்கு!
எதற்கென தீர்மானப்பட
அவசியமும் வரவில்லை...

என் ரெண்டுங்கெட்டா மனதை
காதல் ஆட்கொண்டுவிட்ட
ஒரு மாலை கடற்கரை சந்திப்பில்...

அவள் அழைப்பிதழ் நீட்டியதும்
அலை என்னில்
நுரை துப்பிப்போனது மட்டும்
நினைவிருக்கிறது!


-ரசிகன்

நன்றி
யூத்ஃபுல் விகடன்!
http://new.vikatan.com/article.php?aid=5290&sid=151&mid=10


நன்றி
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13488:2011-03-10-10-21-09&catid=2:poems&Itemid=265


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button


*
ரசிகன்!


தன்னை அறியாது
நீ முன்னிலை படுத்தப்படுகிறாய்
நினைவு ரோட்டில்....

இரு புற சாலையோர மரங்கள்
உன்னை
கண்பொத்தி அழைத்து செல்கின்றன...
ஊர்திகள்
உன் காது பொத்தி வைத்திருக்கின்றன!

டயர் பஞ்சர் ஒட்டும் கடையில்
முகவரி விசாரிக்கிறாய்...
கிட்டத்தில் இருக்கும் தேநீர் கடைக்கு...

இடம் நெருங்கியதும்
தனிமை படுத்தப்படுகிறாய்...
முதலில் ஒரு டம்ளர் தண்ணீர்...
அடுத்து ஒரு தேநீர்...
கூடவே ஒரு சிகரட்!

புரியாத தெளிவோடு
இன்றைய செய்தித்தாளை புரட்டுகிறாய்...
பக்கத்துக்கு பக்கம்
உன்னை தொடர்புபடுத்தியே இருக்கிறது
எல்லா செய்திகளும்!

தற்கொலை...
அகால மரணம்....
காணாமல் போனவர் பற்றிய குறிப்பு...!


-ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31104247&format=htmlரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!
Submit button


*
ரசிகன்!தொலைதூர மௌனங்கள்
நம்மை சடலங்கலாகவே பாவித்து
சுமார் மூன்றரை ஆண்டுகள்!

ஒன்றும் புதியதாய் சொல்வதற்கில்லை.,
சராசரி ஆண் பெண் நட்புதான்
எனினும்
கொஞ்சம் கூடுதலாகவே
கவனிக்கப்பட்டிருக்கிறோம் நம் வட்டத்தில்!

குறைந்தபட்ச நம் வாழ்வை
சுறுக்கமாய் சொல்வதென்றால்....
வகுப்புகள் திருடி
சாலையோரம் வைத்தோம்...
நேரங்கள் கழிக்க
சண்டையிட்டே தொலைத்தோம்...
அதிகபட்ச விளைவு நட்பு!

காதலெனும் காந்தப்பறவை
உன்னை கவர்ந்து தூக்கிப்போக
உலகப்பார்வையில் நான் வேற்றுகிரக வாசி!

இடைவெளிகளும் களைத்துப்போக
தாமாகவே முன்வந்தாய்
ஒரு மன்னிப்போடு
ஒரு நலம் விசாரிப்போடு!

அரைமணி நேர உரையாடல்
நீ முடித்துப்போக
நான் மீண்டுமொரு முறை வாசிக்கிறேன்...

உன் அம்மாவின் காரக்குழம்பு
என் நாவை இனித்துப்போவதை
மறுப்பதற்கில்லை!


-ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041710&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!
Submit button


*
ரசிகன்!


இணைந்தொருவன் இயங்கும் கூட்டத்தில்
அகாலமாய்
தனித்து விடப்பட்டிருக்கிறது இதயம்!

எவனுடையதும்
எவளுடையதும்
பிடிமானம் இருப்பதில்லை
அதன் விரல் பிடிப்பில்...

யார் நீங்கள்?
எங்கு நிற்கிறேன்?
எங்கு செல்லப்போகிறேன்?
முகவரிகளற்ற உலகத்தில்
விடைகள் எதையும்
தெளிவாய் சொல்லத்தெரியவில்லை எனக்கு!

சிலவற்றை
வாய் கூசாமல் சொல்லிவிடலாம்...

இன்னுமொரு காதல்,
இன்னுமொரு புணர்வு,
இன்னுமொரு வோட்கா!


-ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041016&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!
Submit button


*
ரசிகன்!
சிகரெட் நெடியில்
பிரிபடுகிறது மனம் இரண்டாய்...
ஒன்றில் அவளும்
மற்றொன்றில் அவள் மட்டும்!

என்னை வெறித்துப் பார்க்கும்
இந்த அணில் பிள்ளைக்கு
உன்னை நினைவிருக்கலாம்...
அந்தளவுக்கு கொஞ்சியிருக்கிறாய்...

காற்றில் உதிர்ந்து கிடக்கும்
இந்த பூக்களுக்கும்
உன்னை நினைவிருக்கலாம்...
ஒவ்வொன்றுக்கும்
ஒரு முத்தம் வீதம் வெட்கப்பட்டிருக்கிறாய்...

நீ இருந்திருந்தால்
நாம் கொள்ளை போன
அத்தனை தருணங்களையும்
கதை பேசி இருக்கலாம்...

சுவாசப்பை சூடேறுகிறது...
புகையிலையின் வாசம் போய்
பஞ்சு வடிகட்டியின் நாற்றம் அர்த்தப்படுகிறது!

மீள முயற்சிக்கும்
மற்ற நினைவுகளுக்கு ஒரு சூடு!

- ரசிகன்


நன்றி
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13924:2011-04-01-11-50-58&catid=2:poems&Itemid=265
ரசிகன்!அர்த்த ராத்திரியின்
ஒரு வெண் புள்ளியில்
படர்ந்திருக்கிறது என் வானம்...

மூன்றாம் பாலினத்து இசையோடு
மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது
என் உலகம்!

பரவசங்கள் நிரம்பிய
உன் வருகையை
சிலாகித்துக்கொண்டிருக்கின்றன
என் அறை வாசமும்
சுவர் குறிப்புகளும்!

அவ்வளவு எளிதாய்
தொடங்க முடியாத கவிதையை
எவ்வளவு சுருக்கமாய்
முடித்து விடுகிறது உன் தீண்டல்...

இதோ...
அடங்கிடாத அவ்வழகை
என் மூன்றாம் சாமத்து நாடி நரம்புகள்
வரையத் தொடங்கிவிட்டன!

வண்ணம் தீட்டிட
ஒற்றை காலில் நிற்கிறது இரவு!"


- ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311040315&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!
Submit button


*