முன்பொரு கவிதைகளில்
இல்லாத ஓர் உயிர்
மரிக்க தொடங்கியிருந்தது
இக்குறிப்புக்குள்...
மௌனங்கள்
வாய் விட்டு அழுகிறதென்ற
ஒரு வரம்பு மீறிய பொய்
என் விதிகளுக்கு உட்பட்டது தான்!
நெடு நேர பேச்சுக்கள்
மௌனங்களாகவே முடிந்த
இரவை என்னவென்று குறிப்பிட்டு வைக்க?
அவள் முதல் முத்தமும்
அது சார்ந்த ஈரமும்
முழு காமத்தை வித்திட்டதென
வெட்கம் விட்டு சொல்ல
முடியவில்லை எனக்கு!
அவள் காதலென நெருங்கி வந்தாள்..
நான் காமமென தள்ளி சென்றேன்...
இந்த இடைவெளியை நிரப்பிடவே
பல இரவுகளோடு சண்டையிட்டு
மண்டியிட்டிருக்கிறேன்...
பிறிதொரு நாள்
தன்னை
பெண் பார்க்க வந்ததாய் கதறியவளை
என்ன சொல்லி ஆசுவாசப்படுத்த?
ஒரு பெருத்த
ஏமாற்றம் எனக்கு!
எதற்கென தீர்மானப்பட
அவசியமும் வரவில்லை...
என் ரெண்டுங்கெட்டா மனதை
காதல் ஆட்கொண்டுவிட்ட
ஒரு மாலை கடற்கரை சந்திப்பில்...
அவள் அழைப்பிதழ் நீட்டியதும்
அலை என்னில்
நுரை துப்பிப்போனது மட்டும்
நினைவிருக்கிறது!-
ரசிகன்நன்றி
யூத்ஃபுல் விகடன்!
http://new.vikatan.com/article.php?aid=5290&sid=151&mid=10நன்றி
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13488:2011-03-10-10-21-09&catid=2:poems&Itemid=265ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

*
நலம்..
நலமறிய அவா!
நினைவிருக்கிறதா?
அன்றொரு மழை நாள்
கையில் நினைவோடு
என் வாசற்படியில் உன்னை கப்பல் விட்டது?
நீ
நனைந்தபடியே பேசிக்கொண்டிருந்தாய்...
நான் யாரையோ நினைத்துக்கொண்டிருக்க
தேநீர் உனக்கு காது கொடுத்திருந்தது!
மழை விட்ட கொஞ்ச நேரத்தில்
இரவு பொழிய
சாத்தப்பட்டன பகற்கதவுகள்...
நீ கண்களை மூடிக்கொள்ள
நான் கனவுகள் தேடினேன்...
நிகழ்வுகளற்ற அவ்வுலகத்தில்
நீ, நான், மௌனம் மற்றும் தனிமை!
என் மிக நெருக்கமானவையும்
என் மிக பிடிக்காதவையும்
அவை இரண்டு!
மரியாதைக்கு கூட
சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டேன்...
நாளை நீ சந்திக்க நேர்ந்தால்
அவைகளை கேட்டதாக மட்டும் சொல்!
நினைவுகளுடன்,
ரசிகன் நன்றி
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13717:2011-03-21-16-17-46&catid=2:poems&Itemid=265ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

*
மறக்காமல்
வாங்கி வர சொல்லியிருக்கிறாள்
ஒரு டைரிமில்க் சாக்லேட்டும்
டெட்டி பியர் பொம்மையும்!
நான்குமுனை சந்திப்பின்
சிக்னல் நிறுத்தத்தில்
நீ என்னை பார்த்ததை
நான் பார்க்காமலில்லை....
உன் மகளின்
தலைக்கோதியபடி
செயற்கையாய் பேசிக்கொண்டிருந்தாய்
உன் கணவனோடு!
என்
கையில் இருந்தவை
நிச்சயம் அறிமுகப்படுத்தியிருக்கும்
என்னை உனக்கு!
உனக்கு மிகப்பிடித்தது
எப்படி
என் மகளுக்கும்
பிடித்துப்போனது என்பதில் தான்
விடையேதும் கிட்டவில்லை எனக்கு!-ரசிகன்நன்றி
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13371:2011-03-06-22-12-23&catid=2:poems&Itemid=265ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

*
பின்னிரவுகள்.,
ஒரு நாள் கணக்கு
நமக்கு!
நம்முலகை
இவ்விரவுகள் தத்தெடுத்திருப்பதாக
தொலைப்பேசிகள் பேசிக்கொள்கின்றன!
என்ன தொடங்கினோம்?
ஹ்ம்ம் என்பதாகவே
முடிவுறுகிறது உரையாடல்கள்!
பல
கணம் கடந்த காதலை
காமத்தின் ஒற்றை சொல்லில்
திணித்து வைத்திட
எண்ணமில்லை இருவருக்கும்!
காதல் தான்
நம்மை பேசிக்கொண்டிருக்கிறது.,
காதல் தான்
நம்மை சுவாசித்துக்கொண்டிருக்கிறது.,
காதல் தான்
நம்மை காதலித்துக்கொண்டிருக்கிறது!
உன்னை
தூங்க வைப்பதாய் நானும்
என்னை
தூங்க வைப்பதாய் நீயும்
ஒவ்வொரு பின்னிரவிலும்
தோற்றுப்போகிறோம் சேவலின் கூவலில்!-
ரசிகன் நன்றி
கீற்று http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13107:2011-02-19-11-59-30&catid=2:poems&Itemid=265நன்றி
அதீதம்
http://www.atheetham.com/iravukalam.htm
*

ஒரு
மிச்சப்பட்டிருந்த நாற்காலி
பரஸ்பரம் பேசுகிறது!
மூன்றாண்டுக்கு பின்
பார்க்கும் முகம் என்றோ
காதல் அறிமுகப்படுத்திவிட்ட
மனசு என்றோ
ஒரு சலனமுமின்றி
புன்னகைத்து திரும்பிக்கொண்டது
அந்த நாற்காலி!
நலம் விசாரிக்கையில்
ஓலமிட்ட அவள் கைபேசிக்கு
என் அனுமதி கேட்கிறாள்....
இங்கிதம் தெரிந்தவள்..
சங்கடங்கள் விரும்புவதில்லை...
எனக்கு
பிடித்தமான கவிதையையும்
அவள் விரும்பியது இல்லை!
நாற்காலி
மீண்டும் மிச்சப்பட்டிருந்தது!
- ரசிகன்
நன்றி!
கீற்று...
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=12356&Itemid=265

ஒரு
வெளிர்நீல மைதானத்தின் கீழ்
பனிக்குவியல்களை
உரிமை கோர
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!
கொஞ்சம் எடுப்பாகவும்
கொஞ்சம் மிடுப்பாகவும்
அலட்டிக்கொள்கின்றன
அவள் அழகுகள்!
மிதமாய்
தூறல் விட்டுக்கொண்டே
சலனப்படும்
சில புன்னகை மழைகள்...
ஆர்குட்டையோ
முக நூலையோ
இன்ன பிற சமூக வலைத்தளங்களையோ
கவர்ந்து விட எத்தனிக்க
முற்றிலுமாக
முடங்கிக்கொள்கிறாள்
ஒரு
குளிர் தாங்கும் மேலாடையில்!
- ரசிகன்
நன்றி
கீற்று
*
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11930:2010-12-14-20-17-40&catid=2:poems&Itemid=265 *

காதல் சபிக்கப்பட்ட
ஒரு பேனா முள்ளில்
பெண்மை உமிழும் அகராதி
காதலி!
இக்கவிதை...
நமக்கானதாய் புனரமைக்கப்பட்ட பூமி!
வெண்ணிற நிலவும்
செந்நிற ஆப்பிள்களும்
தடை செய்யப்பட்ட
இந்நட்சத்திர தோட்டத்தில்
நீயென நான்
நானென நீ
கவிதையென எழுதி முடிக்க
காதலென கொஞ்ச வார்த்தைகள்!
தூறல் விழும்
சிறு மழை காட்டில்
ஊடல் அவ்வப்பொழுது நனைந்துவிட்டுப்போகும்!
பெண்மை பேசும்
புது வெட்கம் போல
சலனம் எப்போதாவாது பொய் பேசிப்போகும்!
அவள் அன்றி அவளாடை
தீண்டி விடும்
காற்றோ, புல்லோ , பூக்களோ
எந்நேரமும் ரீங்காரமிடும் காதலிசையென!
பகலுக்கு இரவின் மீதிருக்கும்
தீராத ஆசையையும்
இரவுக்கு பகலின் மீதிருக்கும்
தீராத பகையையும்
எழுதி முடிக்க வார்த்தைகளற்று
களைப்புற்று இளைப்பாற
கண் விழித்து பார்க்கையில்
காதலி மடியில் துயில் கொண்டது
எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?
- ரசிகன்
*
நன்றி!
கீற்று..
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9876:2010-07-07-04-38-45&catid=2:poems&Itemid=265
*

மதுவை
ஒத்திருக்கும் மானுடம்!
போதையென பொழிதல்
மழையாய் தெரியலாம்!
நனைதல் விசித்திரமல்ல...
சிலருக்கு சுகமென தெரிவது
ஒரு சிலருக்கு
எரிச்சலாய் இருக்கலாம்!
குடை பிடிக்குமாம் காதல்....
ஆண் வாசனையை
உள்ளமுக்கியபடி!
யாரோ இறைத்து சென்ற சேறும்
சட்டைப்பையில் பத்திரமாய்!
நேற்று அவளென பேசியவன்
மாறுதலுக்கு உட்பட்டு
இன்று இவளென சொல்வதில்
ஆச்சரியமும் அதிர்ச்சியும்
எவருக்குமில்லை
நாளை
உன்னை சொல்லாதிருக்கும் பட்சத்தில்...
தலைக்கேறிய உச்சத்தில்
முட்டிவிடுகிறான்...
அடி என்னவோ
நட்பிற்கும் சுற்றத்திற்கும்...
எதற்கும்
கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்...
கடந்து வருகிறது
அதே மழை!
- ரசிகன்
நன்றி,
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=9746:2010-06-24-01-58-30&catid=2:poems&Itemid=265

ஆடையிருக்க
வெட்கமெதற்கென
ஒரு வரியாய் வினவ
" ஐயோ ச்சீ போ......"
இது காதல் துவங்கும்
அவள் வாழ்த்துப்பாடல்!
இசைக்கு
பெண்மயிலின் முத்த சத்தங்கள்!
இயற்கைக்கு எதிராய்
பூக்கும் நேரம்
இவ்வேளையின் ஒத்திகைக்கு!
சட்டென மாறிடும் வெப்பம்
வியர்த்தலுக்கு பொறுப்பேற்காது...
மாறாய் ஓவியம் தீட்ட
ரேகைகள் இந்நேர இறகுகள்!
அனுமதிக்கு ஒரு வெட்கமும்
அத்துமீறலுக்கு ஒரு வெட்கமும்
அவள் செய்துகொண்ட ஒப்பந்தம்!
புறந்தள்ளும்
ஆசைகளையெல்லாம்
வெட்கங்கள் ஆக்கிரமிக்க...
இன்னும்
வரையப்படலாம்
ஓராயிரம் தீண்டல்கள்!
- ரசிகன்
-------
நன்றி..
கீற்று!
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9506:2010-06-11-06-03-54&catid=2:poems&Itemid=265

தனிமை
ஒரு பொழுதேனும் உணர்ந்ததில்லை...
உணர்த்தியிருக்கிறது...
நிரம்ப அவளும் அவளையும் மட்டும்!
கதையென அரங்கேறுமிடத்தில்
கவிதைக்களம் நட்பு....
கதாப்பாத்திரம் காதல்...
கவிதையின் நாயகன்
முன்பொரு நாள்....
காதலர்கள் வயப்பட்ட சுடுமண்ணில்...
தாகம் தீர்த்ததற்காக
நண்பனென கல்லெறியப்பட்டவன்...
காயங்கள் ஒரு பொருட்டல்ல...
கண்ணீர் ஆற்றிவிடுகிறது!
நினைவுகள் ஒன்று கூடுமிடத்தில்
மயானங்களும்
கதவை மூடிக்கொள்கின்றன...
நிம்மதியாய் கண்ணீர் வற்றிவிடுகிறது!
முடிவை
முன்னின்று நடத்த
இழுத்தடித்து சாத்தப்பட்ட மனதில்......
சாத்தான்
ஒரு கோப்பையிலும்
கூத்தாடி
மறு கோப்பையிலும்
தள்ளாட்ட தாண்டவம்!
- ரசிகன்
***
நன்றி,
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31006066&format=html
***
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9426:2010-06-07-08-13-52&catid=2:poems&Itemid=265

முன்குறிப்பெழுதுவது
இக்கவிதை வாசிக்கும் பொருட்டு
வாசகனின் கவனத்தை ஒரு நிலைப்படுத்தல்...
இப்படியாக தொடங்கும்
கவிதை கருவில்
காதலை வசை பாடுவதாக
முன்னமே அறிவிக்கப்படுகிறது...
மூர்க்கத்தனமான முத்தமொன்றில்
மூச்சு வாங்கியபடி
அடுத்த பந்திக்கான வரிசையில்...
கூட்டம் சலசலப்பையும்
தனிமை சலனத்தையும்
இயல்பாகவே திணித்திருக்கிறது!
அடுக்கடுக்கான சத்தியங்கள்
பரிமாறப்படும் வேளையில்
எதிர்பாலின கவனம் ஈர்க்கப்படுவது
காதலை உறுதிசெய்வதாய் யூகிக்கலாம்!
இவ்வாறாக மலர்தல்
பூஞ்சோலை தோட்ட மறைவிலோ
இணைய தள மையங்களிலோ
பூப்பெய்தி விடுகின்றன!
வரைமுறைகள் தளர்த்தப்பட
அவனோ அன்றி அவளோ கூறுவதாய்
"அடுத்த வாரம் எனக்கு கல்யாணம்...
இப்போ போய்.. ச்சீ விடுடா"
என்பதுபோல் முடிவுபெறுகிறது
நான் வசை பாடிய காதலும்
நீங்கள் அசை போட்ட கவிதையும்!
நன்றி ,
கீற்று !
***
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9192:2010-06-02-12-36-35&catid=2:poems&Itemid=265

*
*
சதுப்பு மேசையில்
காதல் முன்னோட்டத்திற்கான
ஊடல் கரைந்தோடுகிறது!
ஒரு மெல்லிய தருணமது...
அவள் இதழுக்கும்
உரசும் ஐஸ் கிரீமுக்கும்...
இதழ் ரேகைகளின்
நெளிவு சுளிவுகளில் தேங்கி இருந்தவை
நாவுக்கு ஏற்ப
மொழி மாற்றம் செய்யப்பட
மீதமுள்ள பிழைகளை
திருத்தம் செய்கிறாள்!
இதழ்கள்
முன்னமே வண்ணம் தீண்டப்பட்டன!
புருவங்கள்
கூர் தீட்டப்பட்டன!
மயிரிழைகள்
ஓரம் கட்டப்பட்டன!
முகத் தோரணை
முடிவு செய்தாகிவிட்டது!
இக்கணம்
முன்னும் பின்னுமாய் பார்த்து
யாரும் பொருள்பட விளங்காது
திருத்தங்கள் செய்யப்பட்ட
கலைந்தாடிய ஆடையுடன்
"நல்லா இருக்கேனா"
என்ற கேள்வியோடு
முடித்து வைக்கிறாள்...
என்னையும் இக்கவிதையையும்!!!
*
நன்றி
கீற்று!
***
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9163:2010-05-30-18-02-02&catid=2:poems&Itemid=265

"
மழைக்காற்றின்
பின்னிரவுக்கு முன்பாக
காதல் திரவியங்கள் வாசம் தீட்டப்படுகின்றன
ஜன்னலின் விழி வழியோரம்!
சாரலென இதமாய்
மிதமாய் தூறும்வண்ணம்
மழலையின் முதல் முத்தம்
எச்சில் படர்ந்திருந்தது!
பதனிடப்பட்ட நாணங்கள்
துயிலெழும் தூரத்தில்
சலனங்கள் அர்த்தப்பட்டிருக்கக்கூடும்!
எதிர்பட்ட
கூச்சல்கள் மௌனித்துவிட
அங்குமிங்குமாய்
திட்டுத்திட்டாய் சில கூச்சக்கோடுகள்!
முன்னிரவுக்குப் பிறகான மிச்சத்தில்
முன்மொழிதல் அவளெனவும்
வழிமொழிதல் நானெனவும்
பின்னிரவுக்குப் பிறகான வெட்கத்தில்
தொடர மறுக்கும்
என் பேனா முனை!
- ரசிகன்
***
நன்றி ,
கீற்று!
*
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8937:2010-05-25-05-22-20&catid=2:poems&Itemid=265

"
பயணத்தின்
பெயர் மற்றும் முகவரி
நட்பென குறிப்பெடுக்கப்படுகிறது!
மெல்லினம் அவளெனவும்..
வல்லினம் நானெனவும்,
முரண்பாடுகள் ஒன்றுவது போல்
சித்தரிக்கப்படுகிறது பயண வழி !
தோள் சாய்தல் பகிர்வதாகவும்
கரம் கோர்த்தல் பிணைப்பதாகவும்
மடிசாய்தல் இளைப்பாறுவதாகவும்
வழித் தடங்களில் சுட்டப்பட்டுள்ளது!
இந்நெறிமுறைகளுக்குட்பட்டு
பாதைகள் தீர்மானப்பட..
நடுவானத்தில்,
பிறிதொரு வழிப்போக்கனின் விழியில்
மெல்லினம் காதல் சுவையுணர்கிறாள்
முடியாது நீளும்
என் பயணத்தில்
இன்று நட்பிற்குப் பதில்
தனிமை விரல்கள்!
-ரசிகன்!
***
நன்றி,
கீற்று!
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8460:2010-05-11-13-01-53&catid=2:poems&Itemid=265

"
சொல்ல வந்ததை
முதலில்
சொல்லிவிடுவதாக கூறி
மௌனம் பேசத் தொடங்குகிறாள்!
முன் பொழுதும்
முன்னெப்பொழுதும்
ஆரம்ப நிலை
இதுவாய்தானிருந்தது!
இன்றேனும்
சொல்லிவிடுவதை போல
உடல் மொழிகள்
அறிவித்தவண்ணம் இருந்தன!
பொறுமையிழந்த நேரம்
பின்
சந்திப்போம் என்றவாறு கடக்க
இவளும்
அடுத்தொரு நாள்
நமக்கானதாய் இருக்கிறதென்பதை
சொல்லாமல் சொல்லியவாறு
விடைபெறுகிறாள் கனத்த இதயத்தோடு!
-ரசிகன்
***
நன்றி...
கீற்று!
*
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8362:2010-05-08-07-21-49&catid=2:poems&Itemid=265
.jpg)
"
காத்திருப்புகளின் பயணக்களைப்பில்
இளைப்பாரிக்கொண்டிருந்தன
அவள் சார்ந்த நினைவுகள்!!!
முத்தங்களை தாங்கிப்பிடித்தபடி
முணுமுணுத்துக் கொண்டிருக்கும்
நிலா வடிவ சுவர் கடிகாரம்...
அறை நெடுக
விழி படும் இடமெல்லாம்
குமிழும் அவள் கூந்தல் ஈரம்...
அவள் கொஞ்சல் மொழிகளை
மௌனமாய் உச்சரித்து விளையாடும்
அந்த தலையாட்டு பொம்மை...
மறுபுறத்தில்
விசிறியின் உந்துதலுக்கு
வெட்கமறியா சில காகிதங்கள்
ஒன்றை ஒன்று உரச
ஒரே கூச்சலும் குழப்பமுமாய்....
இடையிடையில்
காதல் வேட்கையில்
திட்டுத் திட்டாய் சில தணிக்கை வெட்டுக்கள்...
உதறி எழுந்து
இயல்பு நிலைக்கு திரும்புகையில்...
கலவரமறியாது
இசையெழுப்பிக் கொண்டிருந்தது
ஜன்னலின் திரைசீலை....
-ரசிகன்
-----------------
நன்றி!
கீற்று...
---> http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=6882:2010-04-25-04-20-18&catid=2:poems&Itemid=265