Showing posts with label வார்ப்பு. Show all posts
Showing posts with label வார்ப்பு. Show all posts
ரசிகன்!



மனித வர்க்கத்தின்
மாமிச மனதை
கலவரப்படுத்திக் கொண்டிருக்கக்கூடும்
மூலையில் ஒரு காதலும்
முடுக்கில் ஒரு காமமும்!

எவனும் தப்பிப்பதாயில்லை...
அவளிடத்தில்
குற்றவாளியாய் சரணடைவதை விட
வேறு பேறும் பெரிதில்லை...

எவளும் சிக்குவதாயில்லை...
அவனிடத்தில்
காதலியாய் முன்மொழிவதை விட
வேறு காரணி தேவையில்லை..

காமமும் காதலும்
ஒன்று கூடும்
ஒரு வேதியியல் திருவிழா!

நிலவின் மகரந்த வீச்சில்
பூக்களின் விரிப்பில்
அவள் மார்போடு
அவன் ஊர்ந்து சாய்ந்தாட

ஒரு மனிதன்
காதல் என்கிறான்..
ஒரு மனிதன்
நண்டூருது நரியூருது என்கிறான்!


-ரசிகன்


நன்றி
வார்ப்பு
http://vaarppu.com/view/2477/


*
ரசிகன்!


வெறுமன
பூக்கள் மட்டுமே
நிறைந்திருக்கும் காடு...

செங்குத்தான
ஒரு மர இடுக்கில்
வேட்டையாட காத்திருக்கும்
உங்களின் யூகங்கள்!

யாரும் நுகர்ந்திடாத
வாசம் கொண்ட
கவிதைகள்
சறுக்கலான பாதைகளில்
வெட்கி ஜீவித்திருக்கும்...

கனவு தேவதைகள்
கருத்தரித்து
விட்டுச்சென்றவையாய் இருக்கலாம்...

பிறந்த பசியில் அழும்
ஒவ்வொரு பத்தியையும்
உயிர் உருவம் அற்ற
ஒவ்வொரு காதலிகள்
பசியாற்றிக்கொண்டிருக்கக்கூடும்!

அவள்கள்
மிக பரிச்சயமான
முகமாகவும் இருக்கலாம்...
உலகம் கண்டிடாத
ஏவாளாகவும் இருக்கலாம்!

-ரசிகன்

நன்றி
வார்ப்பு
http://vaarppu.com/view/2384/



*
ரசிகன்!



நடந்து முடிந்தவற்றை
பேசிக்கொண்டிருந்தது
ஒரு அகால டைரி!

பக்கம் பக்கமாய்
பேனா மையின் ரேகைகள்
சற்று கீறலுடன் கையொப்பமிட்டிருந்தன!

நேற்று முடித்த
பக்கத்தின் கடைசி வரியில்
மை தீர்ந்து போக

இன்று எழுத முடியா மிச்சத்தை
மொத்தமாய் நிறைவு செய்தது
ஒரு அகால மரணம்!

- ரசிகன்

நன்றி
வார்ப்பு
http://vaarppu.com/view/2384/

*
ரசிகன்!



எல்லாமும்
முடிந்து போயிருக்கும் இந்நேரம்!

அணையப்பட்ட விளக்கு
ஏற்றப்பட்டிருக்கும் இவ்வேளை

என்னில் கொஞ்சியதைப்போலவே
வாழ்வை தொடங்கியிருக்கக்கூடும் அவள்!

கடவுள் இருந்திருப்பதாக
பலமுறை வேண்டியிருக்கிறாள்...
நீ,
நான்,
நம் குழந்தை
என ஒரு உலகுக்காக!

நிராகரிக்கப்பட்டது!
பதில்- ஆதாம் ஏவாளுக்கு காவு விடப்பட்டிருக்கும்!

இனிவரும்
உணர்வுகளோ , வார்த்தைகளோ
ஆபாசமானதாகவும்
வன்மையாகவுமே இருக்கக்கூடும்!

நானும்
சராசரி மனிதன் தானே?
திடப்படுத்திய மனதுடன்
புள்ளி வைக்கிறேன்!

உங்களில் யாரேனும்
காதலியை தாரை வார்த்திருக்கக்கூடும்!
என்னால் தொடர முடியாத
இக்கவிதையை
நீங்கள் முடித்து வையுங்கள்...

என் மௌனம்..
என் தனிமை..
எனக்காக காத்திருக்கிறது!

*
நன்றி!
வார்ப்பு

http://vaarppu.com/view/2285/



*
ரசிகன்!


உங்கள்
எவரையும் போல் நானில்லை!
ஒரு நட்பு மட்டுமல்ல...
ஒரு காதலையும் தொலைத்தவன்..
என்னையும் தான்!

என்னைப்போல
நீங்களும்
ஏதேனும் ஒரு நினைவோடு/ தோல்வியோடு
புழுங்கிக்கொண்டு தான் இருக்கிறீர்கள்...
என்ன ஒன்று...
அதை வாசிக்கவோ / ரசிக்கவோ
உங்களிடம் நீங்கள் இல்லை!

இப்படியான நினைவுகளை விட
ஒரு கொடூர விலங்கொன்று இருக்குமாயின்
நிச்சயம்
அது நானாகத்தான் இருக்கக்கூடும்-
என் ஆசைகளை கொன்று திண்கிறேன்!

நிழலை
விழுங்க முயற்சிக்கும் என் இரவில்
பேய் என படரும்
அவள் நினைவுகள்
இம்மனித பிசாசை
தூங்க விடப்போவதில்லை...

அவளின்
தீரா தாக நினைவுகள் பட்டு
தெறிக்கிறது என் மௌனம்...
ஒன்று கவிதையாகி விட்டது!
மற்றவை அனாதையாகி விட்டது!

-ரசிகன்

நன்றி,
வார்ப்பு!
*
http://vaarppu.com/view/2285/


*
ரசிகன்!



தேனூறும் சிறுப்பூவில்
ஊடல் தேடும் நுண்ணுயிர் போல

யாருமில்லா தனிமையிலும்
வலுக்கட்டாயமாய் திணிக்கப்படுகிறது
ஒரு நினைவும் ஒரு நிழலும்!

முகம் கொடுத்து பேச இயலாது
எல்லோரும் முகம் சுழிக்க
என் பேச்சுகளுக்கு தூக்கமின்மை!

சூழ்நிலை இசையிலும்
நினைவுகளின் அலைவரிசையில்
லப் டப் இசை.. தப்புத்தாளமாகி விடுகிறது!

இறுகிப்போன இதயத்தின் மத்தியில்
செல்லரித்துப்போன நிஜங்கள்
யாவும் புறக்கணிக்கப்பட்டவை!

மீண்டெழும் சாத்தியக்கூறுகள்
மறுக்கப்பட்ட உண்மைகளாய்....

தனிமை பிடித்திருக்கிறது-
எனக்கு நானே செய்துகொண்ட
மானசீக ஒப்பந்தம்!


*
நன்றி,
வார்ப்பு!

http://www.vaarppu.com/view/2193/
ரசிகன்!

இருட்டணைத்த மொட்டைமாடியில்
முதலில்
ஒரு வால் கொண்ட விண்மீன் தான்
போரிட எத்தனித்திருந்தது!
மின்னல் வேகத்தில்
மடிந்து போனது
மற்ற மீன்களுக்கு
ஒரு கிலியை ஏற்படுத்தியிருக்கக்கூடும்!

சீற்றத்துடன்
வெள்ளொளியை கக்கியவாறு
ஆணவத்துடன் முதல் அடி எடுத்துவைக்கிறாள்
வெண்ணிலா!

பின்னடி வைக்காமலே
விண்மீன்கள் ஒன்றுவிடாமல்
பின்வாங்கி கொண்டன!

நீயா நானா என்ற
தீர்மானம் கொண்டு
அவள் நெருங்கிவரவும்

என்னவள்
தலை சுற்றியிருந்த
நூலாடை மெல்ல நழுவவும்
சரியாய் இருந்தது!

தோற்ற பொலிவில்
தோற்றுப்போனவள்
ஒத்துக்கொள்ளாமல் ஒளிந்துகொண்டாள்
மேகமூட்டத்தினூடே!

-ரசிகன்!

நன்றி வார்ப்பு!!!
http://vaarppu.com/view/2143/
ரசிகன்!

அது
அவளாய் தான் இருக்கக்கூடும்!

ஆழ் நித்திரையில்
மெல்லிய இழைக்காற்று
கவிதை பேசுவதும்,

நினைவுகளை கையகப்படுத்தி
கனவுகளை திரை போடுவதும்,

போர்த்திய போர்வையை
கால் மாட்டில் இழுத்துவிடுவதும்,

நிச்சயம்
அவளாய் தான் இருக்கக்கூடும்!

நாளை
எப்படியும்
அவளிடம் சொல்லிவிடுவதென்ற
தீர்மானத்தோடு
ஒவ்வொரு இரவும் விடைபெறுகிறது!


-ரசிகன்!
.

நன்றி....
யூத்ஃபுல் விகடன்!!!
.
http://youthful.vikatan.com/youth/Nyouth/rasiganpoem120410.asp