ரசிகன்!


வெறுமன
பூக்கள் மட்டுமே
நிறைந்திருக்கும் காடு...

செங்குத்தான
ஒரு மர இடுக்கில்
வேட்டையாட காத்திருக்கும்
உங்களின் யூகங்கள்!

யாரும் நுகர்ந்திடாத
வாசம் கொண்ட
கவிதைகள்
சறுக்கலான பாதைகளில்
வெட்கி ஜீவித்திருக்கும்...

கனவு தேவதைகள்
கருத்தரித்து
விட்டுச்சென்றவையாய் இருக்கலாம்...

பிறந்த பசியில் அழும்
ஒவ்வொரு பத்தியையும்
உயிர் உருவம் அற்ற
ஒவ்வொரு காதலிகள்
பசியாற்றிக்கொண்டிருக்கக்கூடும்!

அவள்கள்
மிக பரிச்சயமான
முகமாகவும் இருக்கலாம்...
உலகம் கண்டிடாத
ஏவாளாகவும் இருக்கலாம்!

-ரசிகன்

நன்றி
வார்ப்பு
http://vaarppu.com/view/2384/



*
ரசிகன்!


வலிகளின்
கூர்மையில் கசியும்
ஒரு துளி கண்ணீர் காட்சி...
சாட்சியும் கூட!

மெதுவாய்
விழிகளை ஈரமாக்கி
இமைகளின் வரப்பில்
ஒரு கணம் தேங்கி நிற்கிறது!

சுதாகரித்துக்கொள்ள
போதிய நேரமில்லை...
பிளந்து விழுகிறது
கன்னப்பரப்பில்!

வலிகளுக்கான ஊடகம்
ஒரு நேர்கோட்டில்
பயணித்து வருகிறது கண்ணீரென!

மொத்த வலிகளையும்
ஈரமாக்கி
ஒரு நீர் உருண்டையாக்கி
தாடையின் விளிம்பில்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
ஒரு துளி மட்டும்!

-ரசிகன்
நன்றி
யூத்ஃபுல் விகடன்
http://new.vikatan.com/article.php?aid=3226&sid=98&mid=10


*
ரசிகன்!



வெள்ளோட்டமாய்
தொடங்கிய தனிமை...

எவ்வுயிர்கள் குழுமியிருப்பினும்
நாற்சுவர்களுக்குள்
அடைபட்டிருந்த ஒரு உலகம்!

விட்டம் அதன் வானம்..
மௌனம் அதன் காற்று..
தனிமை அதன் மக்கள்!
பரபரப்புகள் அற்ற
நினைவுகள்
என் அன்பிற்குரிய
இவ்வுலகத்தின் பிரதிவாதிகள்!

வந்த எல்லோருக்கும்
ஆளுக்கொரு கோப்பையென
பகிர்ந்தளித்து விட்டேன்...

சூடு தணிவதற்குள்
பருகியாக வேண்டும்
தேநீரை!

- ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102208&format=html
ரசிகன்!


பின்னிரவுகள்.,
ஒரு நாள் கணக்கு
நமக்கு!

நம்முலகை
இவ்விரவுகள் தத்தெடுத்திருப்பதாக
தொலைப்பேசிகள் பேசிக்கொள்கின்றன!

என்ன தொடங்கினோம்?
ஹ்ம்ம் என்பதாகவே
முடிவுறுகிறது உரையாடல்கள்!

பல
கணம் கடந்த காதலை
காமத்தின் ஒற்றை சொல்லில்
திணித்து வைத்திட
எண்ணமில்லை இருவருக்கும்!

காதல் தான்
நம்மை பேசிக்கொண்டிருக்கிறது.,
காதல் தான்
நம்மை சுவாசித்துக்கொண்டிருக்கிறது.,
காதல் தான்
நம்மை காதலித்துக்கொண்டிருக்கிறது!

உன்னை
தூங்க வைப்பதாய் நானும்
என்னை
தூங்க வைப்பதாய் நீயும்
ஒவ்வொரு பின்னிரவிலும்
தோற்றுப்போகிறோம் சேவலின் கூவலில்!


-ரசிகன்

நன்றி
கீற்று

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13107:2011-02-19-11-59-30&catid=2:poems&Itemid=265

நன்றி
அதீதம்
http://www.atheetham.com/iravukalam.htm
*
ரசிகன்!


எவருக்கும்
பதில் சொல்ல வாய்க்காத
கேள்வியொன்றில்
மௌனமாகவே விடை பெறுவதில்
எந்த ஆட்சேபமும் இருப்பதில்லை...

காதல் கூடாரத்தை
அனாதையாக்கும் காதலிகள்
கொஞ்சம் நினைவு,
கொஞ்சம் தனிமை,
கொஞ்சம் கூடுதலான
மௌனத்தை மட்டுமே
பரிசளித்துப் போகக் கூடும்!

பேரிரைச்சலின்
ஒரு நீள சாலையில்
முகவரி கேட்கும்
எப்பருவப்பெண்ணிடமும்
மௌனத்தின் விலாசத்தை
சொல்லி நகர்கிறேன்!

அறையை அடைந்ததும்
பரவிக் கிடக்கும்
தனிமை நாற்றத்தை
மௌனங்கள் மட்டுமே
ரசித்து நுகர்வதுண்டு...

ஒரு தற்காலிக உலகில்
மீள்வருகைக்கான
சாத்தியக்கூறுகள்
தென்படும்வரையில்....

மௌனத்தோடு
கை குலுக்கிக்கொள்வதில்
எந்த சிரமமும் இல்லை எனக்கு!

-ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311021317&format=html
ரசிகன்!


மடிக்கணினியின்
நீர்ம படிக உருகாட்டியில்
நிலா திரவியமென
படர்ந்திருக்கிறாய்...

என் தலையணையின்
மேடுக்கு ஈடு கொடுத்தாற்போல
சமன்படுத்தப்பட்டிருக்கிறது
நம் முகங்கள்!

மோனலிசாவுக்கு
அடுத்தபடியாக
ஒரு இனம் புரியா
புன்னகை கொடுப்பவள்
நீ
ஒருத்தியாகத்தான் இருக்கக்கூடும் எனக்கு!

உன் இமைகள் அசைந்தபாடில்லை.,
கூர் தீட்டிய பார்வையில்
எனை குடைந்து ஊடுருவுகிறாய்...
கிறங்கிக் கிடந்த
ஏதோ ஒரு உயிரணுவை
உரசி சென்றிருக்கக்கூடுமென்பது
என் கணிப்பு...

கணினி
அயர்ந்து தூங்கிவிடும்
நிலையில்லா ஒரு கணத்தில்
உன் மேனி புகுந்து
புதைந்து விடத் தோன்றி விடுகிறது!



நன்றி
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12962:-143&catid=2:poems&Itemid=265



*
ரசிகன்!


கிட்டத்தட்ட
பக்கம் வந்து அமர்ந்திருந்தாள்!

நெடு நேர காத்திருப்பில்
கோபம் எனக்கென்பது
அவள் யூகமாக இருக்கக்கூடும்!

நானும் காட்டிக்கொள்வதாயில்லை
என் அதிகபட்ச விருப்பம்
என்ன என்பதை...

இடைவெளிகளற்ற நெருக்கத்தில்
மெல்ல இசைந்து வரும் குரலில்
காதலை குடைந்து ஊற்றும்
தந்திரங்கள்
மிக விறுவிறுப்பானவை எனக்கு!

முகத் தோரணையிலேயே
விருப்பங்கள் தெரிவிக்க
அதன் ரகசியங்கள்
புரிந்துகொள்வது அவளுக்கு அத்துப்படி!

வெட்கி எழுந்து
மெல்ல எதிர் நின்று
என் கன்னங்களை அள்ளி..
காது திருகி...
செல்லமாய் ஒரு குட்டு வைத்தோடிவிடுவாள்
நாளைய காத்திருப்புக்கு!

-ரசிகன்



நன்றி
காட்சி
http://kaattchi.blogspot.com/2011/02/blog-post_10.html#more



*
ரசிகன்!


ஒரு

கை அகல இடைவெளியில்

கடல் கடந்து போகிறது...


தடுப்புக்கம்பிகளின்

எல்லை கோடுகள் வழி

என்ன சொல்வதென தெரியாது

படர்கிறது கைவிரல்கள்

மௌனங்களை பிடித்தபடி.....


என் பக்கத்தில் இருப்பவன்

தன் குழந்தைக்கு

கொடுத்த முத்தத்தில்

எச்சில் ஈரம் கொஞ்சமும் இல்லை...

அவன் கண்ணீரை துடைத்ததும்

ஊற்றெடுக்க முயலும் என் கண்கள்!


விமான எஞ்சின் புறப்பாட்டில்...

தாரை தாரையாய்

கண்ணீர்விடும்

என் அம்மாவும் சரி

என் அப்பாவும் சரி


பல கடல் கடந்த அன்பை

ஒரு முத்தம் கொடுத்து வந்திருக்கலாமென

எனை எழுப்பி சொல்லி...


தாழப் பறக்கிறது விமானம்!


-ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102069&format=html
ரசிகன்!


எழுத படிக்க தெரியாத

ஒரு வாய்பேச முடியாதவனின்

காதல் கவிதை...


பொய் பேசாத

அன்பை ஊட்டும் தாயின்

ஒரு கை நிலாச்சோறு...


பேச ஆரம்பிக்காத

செல்லம் கொஞ்ச துடிக்கும்

ஒரு குழந்தையின்

எச்சில் முத்தம்....


என் கடவுள் என்பது

உங்களின் கேள்விக்குறி

எந்தன் காற்புள்ளி!


-ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102069&format=html


*
ரசிகன்!


ஆழ் நித்திரை
என்பதென்னவோ
பொய்த்துப்போன விஷயம் எனக்கு!

நிலா ஒரு பக்கம்...
நீ மறுபக்கம்..
இடையிலமர்ந்து விடுகிறது
கவிதையெனும் காமம்!

நீ தள்ளிவிடுகிறாய்...
இரவு வெளிச்சத்தில்
ஒரு புள்ளியாகி விடுகிறேன்!

பெய்யெனப் பெய்கிறது
காதல்...
எனை எடுத்து வைத்துக்கொள்கிறாய்...

ஒரு கையால்
தலைகோதி
மறுகையால் தட்டிக்கொடுக்க
கால் மடித்து தூங்குகிறேன்
உன் உள்ளங்கையில்...

காதலுக்கும்
காமத்துக்குமான
இச்சிறிய இடைவெளியில்
என் தூக்கம்
ஒரு அழகான பின்னணி இசையோடு
புணர்ந்து கொண்டிருக்கிறது!


-ரசிகன்

நன்றி
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=12814:2011-02-03-23-27-18&catid=2:poems&Itemid=265


-------

விகடன்

http://new.vikatan.com/article.php?aid=2579&sid=78&mid=10

*