ரசிகன்!


மழை
தன் முதல் முத்தத்தினை
உச்சரிப்பதாய் தொடங்குகிறது
அவள் பிரவேசம்!

பின்னிரவுகளின் விடியலை
பனிமூட்டங்கள் நிர்ணயம் செய்ய
மெதுவே சோம்பல் முறிக்கும் காதல்!

விடாப்பிடியான அன்பில்
ஊடல் கூடல் என்பதாக
இரவு நனைக்க
விட்டது தொட்டது
எல்லாமே காதல் தான்!

காதல் எத்தனித்த ஆண்மையிடம்
ஒரு புன்னகையை காட்டி
வழிமறிக்கும் பெண்மையில்
சமுத்திரத்தையே குடித்துவிட்ட பொழுதுகள்
பரவசம்!

ஒரு தேவதை கதையில்
பிசாசு வருவதை எவரும் விரும்புவதில்லை...
நானும் விரும்பவில்லை...

காலம்...
அவள் பிரிதலுக்கு
ஒரு மௌனம் காட்டி
உயிரை வழியனுப்புதலில்
சமுத்திரத்தையே மூழ்கடித்துவிட்ட கண்ணீர்
விஷரசம்!

தானே மறந்துபோயும்
வருகை பதிவேட்டை
பூர்த்தி செய்ய மறப்பதில்லை நினைவுகள்!

போகுற போக்கில் தாகம் தீருமென்ற
காட்டாற்று தண்ணீராய்
இந்த நினைவுகளின் இல்லத்தில்
தாழ்ப்பாள் ஏதும் இல்லை...
கதவு திறந்து தானிருக்கிறது!

- ரசிகன்

நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310112815&format=html*
ரசிகன்!


காதல் சொல்ல வந்து

மௌனங்கள் சொல்கிறாள்!

கால்கள் நீட்டி

ஒன்றின் மேலொன்று போட்டு

கைகள் கட்டிக்கொண்டு

படகு முதுகில்

ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டாள்..

பூ விற்பவளோ

சுண்டல் விற்பவனோ மட்டும்

அவள் மௌனம் களைய அனுப்பப்பட்டவர்கள்!

வார்த்தைகள் மீட்டெடுக்க

அவள் பொறுமை இழப்பதும்

கரையை தொட்டுச்செல்ல

அலைகள் மீண்டெழுவதும்

தவிப்பு தான்

கடலுக்கும் காதலுக்கும்...

ஒரு முறை

என் பெயர் சொல்லி பார்க்கிறாள்!

அந்த மௌனம்

எனக்கு கேட்பதாய் இல்லை...

மறுமுறை

என் பெயர் சொல்லி அழைக்கிறாள்...

“என்ன?” என கேட்க முற்படும்

அந்த இடைவெளியை

அலைகள் நனைத்துப்போக

வினாடிகளின் நேரத்தில்

என் தோள் சாய்ந்து கொண்டாள்

முழுக்காதலையும்

என் உள்ளங்கையில் பிரசுவித்தபடி!

நான் காதலன் ஆகிறேன்...

மௌனம் மௌனமாகவும்

கடல் இன்னும் கடலாகவுமே இருக்கிறது!

-ரசிகன்

நன்றி,
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310112112&format=html


*
ரசிகன்!


பசி!
உடல் உரசும் இசை!
பெருமூச்சு வேதம்!

பட்டினி!
குடல் பிண்ணும் ஓசை!
மரணமூச்சு விவாதம்!

ஒரு பிறப்பு
அல்லது ஒரு இறப்பு
உத்தரவாதம்!


- ரசிகன்
ரசிகன்!ஒரு பார்வையின் கவனத்தை
திசை திருப்புதலை விட
வேறொன்றும் பெரியதாய் இல்லை....
அவளை சொல்ல!

ஒரு குழந்தையின்
புன்சிரிப்பை காட்டிலும்
அழகாய் பூத்திருந்ததுஅவள் புன்னகை..

பெண்ணினத்தின்
மெல்லிய பொறாமையை விட
சிவப்பு பட்டிருக்கும்
அவள் இதழ்களின் வண்ணப்பூச்சு...

எப்போதேனும் சீறிப்பாயும்
வால் நட்சத்திரத்தை விட
கொஞ்சம்
நிதானமாய் அவசரப்படும்
அவள் காதோர மயிறிழைகள்!

எஞ்சியவை
வெட்கம் கொள்ள...
எனக்கும் கொஞ்சம் வெட்கம் தான்
அவைகளை எடுத்துச் சொல்ல...

ஹ்ம்ம்....
இவளை நிலா என்றோ
பட்டாம்பூச்சி என்றோ
அன்னியப்படுத்துதலை விட

என் காதலுக்கினிய
காதலி என
அறிமுகப்படுத்துதல் சிறப்பு!

வேறொன்றும் பெரிதாய் இல்லை
அவளை சொல்ல..
வெறும் அழகி எனலாம்...
போதுமானது!

-ரசிகன்நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310111421&format=html


*
ரசிகன்!நடந்து முடிந்தவற்றை
பேசிக்கொண்டிருந்தது
ஒரு அகால டைரி!

பக்கம் பக்கமாய்
பேனா மையின் ரேகைகள்
சற்று கீறலுடன் கையொப்பமிட்டிருந்தன!

நேற்று முடித்த
பக்கத்தின் கடைசி வரியில்
மை தீர்ந்து போக

இன்று எழுத முடியா மிச்சத்தை
மொத்தமாய் நிறைவு செய்தது
ஒரு அகால மரணம்!

- ரசிகன்

நன்றி
வார்ப்பு
http://vaarppu.com/view/2384/

*
ரசிகன்!


இன்னும்
மூடிக்கொண்டே இருக்கிறாய்
மொட்டெனும் உடையில்!

அவள்
பேரழகின்
உச்சத்தை நுகர்ந்திட

இன்னும்
ஒரு பொழுதெல்லாம் தாங்காது!
விடிகிற வேளை...
நீ பூப்பெய்திய வாசத்தோடு தான்!

சொல்!
என்ன கூலி வேண்டுமென்று?

தென்றலை
கொஞ்சம் தட்டி விடவா?
நிலவை
கொஞ்சம் கூட்டி விடவா?
பனியை
கொஞ்சம் தீ மூட்டவா?
இரவை
கொஞ்சம் கண் மூடவா?

என்ன தான் நான் செய்தாலும்
இப்படித்தான்
கிறுக்குத்தனமாய் ஏதேனும் பேசிவிட்டு
சுயநினைவுக்கு வருகையில்

என்னையே நான் மறந்து விடுகிறேன்!

-ரசிகன்


நன்றி ,
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011076&format=html


*
ரசிகன்!


முகவரி இழந்த சருகுகளை
எண்ணம் தீட்டிக்கொண்டு நடக்கிறேன்..

என் நினைவு சத்தத்துக்கு
ஈடு கொடுத்துக்கொண்டு
சருகுகளின் பின்னணி இசை..

என் முகவரியை தேடியபடியே
ஒரு மௌனப்பாடல்!

நாளை நானும் சருகாகலாம்...
நீங்கள் பாட்டெழுதிக்கொள்ளுங்கள்!

- ரசிகன்
ரசிகன்!


தலை சாய்ந்து கிடக்கும்
மதுப்புட்டிகளின் வாசத்தில்...
சொட்டுச்சொட்டாய் புணரும்
அமில உணர்வுகள்!

எந்த ஒரு நிகழ்வையும் போல
ஆர்ப்பாட்டமோ இரைச்சலோ
சலசலப்போ இல்லாதிருக்கிறது!

மயான அமைதி என்பதை
ருசித்தும் புசித்தும்
பேனாக்கள்
இச்சைகளை தீர்க்கப்போகும்
காகித இரவின் கடைசிப் பகுதி!!

குறிப்பெழுதல் புதிதல்ல
எனினும்
மரணக்குறிப்பெழுதல்
சற்றே அசௌகரியமாய் தான் இருக்கிறது!

இதுவரை இல்லாததொரு
பயம்!
இடையிடையே தொற்றிக்கொள்ள
அது எதற்காகவேனும் இருக்கலாம்-
நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள்!

எனக்கு
அவள் பிரிவு!-ரசிகன்

***

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310110111&format=html

*