27
Mar
ரசிகன்!


புணர்ந்து கிழித்த அசதியில்
தாமதமான விடியலை
வஞ்சத்தில்
மல்லாக்கப்போட்டு திணிக்கிறது
ஒரு வரையறை இல்லா வித்தை!

மெய் சிலிர்க்க தீண்டிய
பட்டாம்பூச்சி ஒன்று
கம்பிளிப்பூச்சியாய் ஊர்ந்து
அரிப்பெடுக்க...

இரவுகளை நிராகரித்து
வெயிலில் நிற்கிறது
வாழ்வு சபிக்கப்பட்ட
ஐநூறு ரூபாய் நிலவொன்று!


-ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103275&format=html



ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!
Submit button


*
22
Mar
ரசிகன்!


நலம்..
நலமறிய அவா!

நினைவிருக்கிறதா?
அன்றொரு மழை நாள்
கையில் நினைவோடு
என் வாசற்படியில் உன்னை கப்பல் விட்டது?

நீ
நனைந்தபடியே பேசிக்கொண்டிருந்தாய்...
நான் யாரையோ நினைத்துக்கொண்டிருக்க
தேநீர் உனக்கு காது கொடுத்திருந்தது!

மழை விட்ட கொஞ்ச நேரத்தில்
இரவு பொழிய
சாத்தப்பட்டன பகற்கதவுகள்...

நீ கண்களை மூடிக்கொள்ள
நான் கனவுகள் தேடினேன்...
நிகழ்வுகளற்ற அவ்வுலகத்தில்
நீ, நான், மௌனம் மற்றும் தனிமை!

என் மிக நெருக்கமானவையும்
என் மிக பிடிக்காதவையும்
அவை இரண்டு!
மரியாதைக்கு கூட
சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டேன்...

நாளை நீ சந்திக்க நேர்ந்தால்
அவைகளை கேட்டதாக மட்டும் சொல்!

நினைவுகளுடன்,
ரசிகன்


நன்றி
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13717:2011-03-21-16-17-46&catid=2:poems&Itemid=265



ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button


*
20
Mar
ரசிகன்!


தலை நசுங்கிக்கிடந்தவனின்
செருப்பொன்று
சாலையை வெறித்துக்கொண்டிருக்க
ரத்தம் உறைந்த தார் ரோட்டை
தேய்த்துக்கொண்டிருக்கின்றன
மரணம் சுற்றும் சக்கரங்கள்!

மாண்டவனின் கடைசி நிமிட
முனகல்களை
பதிவு செய்ய தவறிவிட்டன
வண்டிகளின் ஹாரன் சத்தமும்
ஆம்புலன்ஸின் சைரன் சத்தமும்!

நிராசைகளாய் போய்விட்ட
வாழ்க்கையின் இறுதிப்படிவம்
சொந்தக்காரனின் கையெழுத்துக்காய்
பிணவறையின் வரவேற்பறையில்...

மீண்டும் பருகத்துடிக்கும்
மரணத்தின்
சாலையை ஒட்டிய மரத்தடியில்
அவன் கனவுகள்
அனாதையாய் விசும்பும் சத்தம்
என்னை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறது!

கவனமாய் செல்லுங்கள்!

-ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311032012&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button



*
13
Mar
ரசிகன்!


மௌனங்கள்
என்னை அறைகிற போதெல்லாம்
என் கோவத்தை
சுவரில் முட்டியோ
யாருமற்ற அறையில் கத்தியோ
தணிந்து விடுகிறேன்!

நீங்கள்
எறிந்து விட்டுப்போகும் தனிமைக்கு
என் வீட்டு கெவுளியும்
பக்கத்து வீட்டு குடும்ப சண்டையும்
தற்காலிக சிநேகம்!

பூஜ்ஜியத்தில்
அர்த்தப்படுகிற என் வெற்றிடத்தை
எதை கொண்டு நிரப்ப?

விண்ணளவு காகிதத்தில்
கடலளவு மை கொண்டு
எழுதி கிழித்துவிடலாம்
ஒற்றை இரவில்....

எழுத எடுத்த பேனாவின்
கருங்குப்பியினுள்
உறைந்து கிடக்கும்
தனி”மை”யின் நாற்றம்
ஒரு வித
போதையினை திணித்து விட

இன்றெழுத விட்டதை
நாளை எழுதிக்கொள்கிறேன்!

- ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311031310
&format=html


*

நன்றி
அதீதம்
http://www.atheetham.com/kavithai.htm


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button



*
07
Mar
ரசிகன்!


மறக்காமல்
வாங்கி வர சொல்லியிருக்கிறாள்
ஒரு டைரிமில்க் சாக்லேட்டும்
டெட்டி பியர் பொம்மையும்!

நான்குமுனை சந்திப்பின்
சிக்னல் நிறுத்தத்தில்
நீ என்னை பார்த்ததை
நான் பார்க்காமலில்லை....

உன் மகளின்
தலைக்கோதியபடி
செயற்கையாய் பேசிக்கொண்டிருந்தாய்
உன் கணவனோடு!

என்
கையில் இருந்தவை
நிச்சயம் அறிமுகப்படுத்தியிருக்கும்
என்னை உனக்கு!

உனக்கு மிகப்பிடித்தது
எப்படி
என் மகளுக்கும்
பிடித்துப்போனது என்பதில் தான்
விடையேதும் கிட்டவில்லை எனக்கு!


-ரசிகன்

நன்றி
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13371:2011-03-06-22-12-23&catid=2:poems&Itemid=265


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button



*
04
Mar
ரசிகன்!
ரசிகனின் iPhone செயலி அறிமுகம்!

To download this from App store , click here!

Submit button

வணக்கம்!

சட்டென தொட்டு விட்டேன் நூறாவது பதிவை.... இன்னும் சரியாய் சொல்லப்போனால் ரசிகன் பிறந்து 6 வருடமாகிறது!

எழுதி முடித்தாகி விட்டது 99 கவிதைகளை ....
கவிதைகள் என்பதை விட... என் ஆசை, கோவம், சந்தோஷம், சோகம், தனிமை, காதல், நட்பு முதலான கலவைகளின் தமிழ் மொழி ஊட்டிவிட்ட ஒரு வாய் சோறு!

எனது மிக சராசரியான வாழ்வில் ஏற்பட்ட ஒரு தற்காலிகமான வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கான ஒரு ஊடகம் தான் இந்த ரசிகன் பக்கங்கள்!

சில நாட்களாகவே ஒரு தொகுப்பினை வெளியிட வேண்டுமென்ற ஒரு ஆவல் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது.... ஆனால்... இன்னும் என் படைப்புகளின் மீது ஒரு முழு மன திருப்தி எற்படாமலிருக்கிறது! இன்னும் நிறைய எழுத வேண்டும், கற்க வேண்டும், வாசிக்க வேண்டும், அனுபவப்பட வேண்டும் என்கிற எண்ணம் நிறைவேறும் பட்சத்தில் அதற்கான முயற்சியில் இறங்கி விடலாம்!
இருப்பினும்... வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தின் பயன்பாட்டினை சாதகமாக்கி...
ரசிகன் 'RASIGAN' எனும் செயலி(Application) உருவாக்கப்பட்டு எனது கவிதைகளை உலகளவில் உலவ விட்டிருக்கிறேன்!

iPhone / iPad பயன்படுத்துபவர்கள் இந்த முகவரியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்! இச்செயலி மாதந்தோறும் புதுப்பிக்கப்படும்!

நன்றிகள்...



இந்த பக்கங்களை நிரப்ப... என் பேனாவை விட அப்பேனாவுக்கு மை ஊற்றியவர்களுக்கு தான் என் நன்றிகளை குவித்து வைத்திருக்கிறேன்!
*திரு. இளங்கோ (கவிதைக்காரன் டைரி)
*திரு. கலாசுரன்
*திரு. ஆறுமுகம் முருகேசன்

இவர்களன்றி இன்று ரசிகன் உருவாகி இருக்க முடியாது! எனது படைப்புகளை தொடர்ந்து வாசித்து, விமர்சனமளித்து, ஊக்கமளித்து வரும் என் தோழர்/தோழிகளுக்கு கோடானு கோடி நன்றிகள்...
குறிப்பிடும்படியாக திருமதி. ஷம்மி முத்துவேல், கவிதா ரவீந்தர்!

கடைசியாக...
எனது படைப்புகளுக்கு அங்கீகாரம் கொடுத்து வரும்
கீற்று , திண்ணை , விகடன் , வார்ப்பு , உயிர்மை , அதீதம்
இணைய இதழ்களுக்கு என் நன்றிகளும், வாழ்த்துகளும்!

-ரசிகன்
Labels: , 14 comments | | edit post