
காதல் சொல்ல வந்து
மௌனங்கள் சொல்கிறாள்!
கால்கள் நீட்டி
ஒன்றின் மேலொன்று போட்டு
கைகள் கட்டிக்கொண்டு
படகு முதுகில்
ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டாள்..
பூ விற்பவளோ
சுண்டல் விற்பவனோ மட்டும்
அவள் மௌனம் களைய அனுப்பப்பட்டவர்கள்!
வார்த்தைகள் மீட்டெடுக்க
அவள் பொறுமை இழப்பதும்
கரையை தொட்டுச்செல்ல
அலைகள் மீண்டெழுவதும்
தவிப்பு தான்
கடலுக்கும் காதலுக்கும்...
ஒரு முறை
என் பெயர் சொல்லி பார்க்கிறாள்!
அந்த மௌனம்
எனக்கு கேட்பதாய் இல்லை...
மறுமுறை
என் பெயர் சொல்லி அழைக்கிறாள்...
“என்ன?” என கேட்க முற்படும்
அந்த இடைவெளியை
அலைகள் நனைத்துப்போக
வினாடிகளின் நேரத்தில்
என் தோள் சாய்ந்து கொண்டாள்
முழுக்காதலையும்
என் உள்ளங்கையில் பிரசுவித்தபடி!
நான் காதலன் ஆகிறேன்...
மௌனம் மௌனமாகவும்
கடல் இன்னும் கடலாகவுமே இருக்கிறது!
-ரசிகன்
நன்றி,
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310112112&format=html*
நடந்து முடிந்தவற்றை
பேசிக்கொண்டிருந்தது
ஒரு அகால டைரி!
பக்கம் பக்கமாய்
பேனா மையின் ரேகைகள்
சற்று கீறலுடன் கையொப்பமிட்டிருந்தன!
நேற்று முடித்த
பக்கத்தின் கடைசி வரியில்
மை தீர்ந்து போக
இன்று எழுத முடியா மிச்சத்தை
மொத்தமாய் நிறைவு செய்தது
ஒரு அகால மரணம்!
- ரசிகன்
நன்றி
வார்ப்பு
http://vaarppu.com/view/2384/
*

முகவரி இழந்த சருகுகளை
எண்ணம் தீட்டிக்கொண்டு நடக்கிறேன்..
என் நினைவு சத்தத்துக்கு
ஈடு கொடுத்துக்கொண்டு
சருகுகளின் பின்னணி இசை..
என் முகவரியை தேடியபடியே
ஒரு மௌனப்பாடல்!
நாளை நானும் சருகாகலாம்...
நீங்கள் பாட்டெழுதிக்கொள்ளுங்கள்!
- ரசிகன்
|
தலை சாய்ந்து கிடக்கும்
மதுப்புட்டிகளின் வாசத்தில்...
சொட்டுச்சொட்டாய் புணரும்
அமில உணர்வுகள்!
எந்த ஒரு நிகழ்வையும் போல
ஆர்ப்பாட்டமோ இரைச்சலோ
சலசலப்போ இல்லாதிருக்கிறது!
மயான அமைதி என்பதை
ருசித்தும் புசித்தும்
பேனாக்கள்
இச்சைகளை தீர்க்கப்போகும்
காகித இரவின் கடைசிப் பகுதி!!
குறிப்பெழுதல் புதிதல்ல
எனினும்
மரணக்குறிப்பெழுதல்
சற்றே அசௌகரியமாய் தான் இருக்கிறது!
இதுவரை இல்லாததொரு
பயம்!
இடையிடையே தொற்றிக்கொள்ள
அது எதற்காகவேனும் இருக்கலாம்-
நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள்!
எனக்கு
அவள் பிரிவு! -ரசிகன்
***
நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310110111&format=html
*